ஜோதிடம்

asto
கங்கை சூழ்ந்த இந்த பூவுலகில் உயிர்பெற்று வாழும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மனிதர்களால் உருவாக்கப்படும் ஆலயம் முதல் தெய்வபிரதிஷ்டை, நகர அமைப்பு, கட்டிடங்கள், கோபுரங்கள் முதலிய சகலவற்றுக்கும் ஜோதிடசாஸ்திரம் இன்றியமையாத ஒன்றாகும். மனிதர்கள் எல்லா காரியங்களுக்கும் ஜோதிட சாஸ்திர விதிப்படிதான் எதையும் செய்கிறார்கள். தெய்வம் இல்லை, வேதபுராண சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை என்று விவாதம் செய்பவர்களும், துறவு நிலையை மேற்கொள்ளும் சன்னியாசிகளும், வணிகர்கள், விவசாயிகள், அரசு தொழிலில் பணிபுரிபவர்கள், மருத்துவ விற்பன்னர்கள், மாணவர்கள் முதலிய அணைவருக்கும் ஜோதிட சாஸ்திரம் தான் புகலிடம். ஜோதிட சாஸ்திரம் தான் வழிகாட்டி. ஒரு நெல்லில் முளைத்த நாத்து பருவமடைந்து கதிர் ஈன்றபோது அதில் 360 நெல்மணிகள் இருப்பதைக் கண்டறிந்து ஆண்டுக்கு 360 நாட்கள் என்று முன்னோர்கள் கணிதம் செய்தார்கள். நவக்கிரக மண்டலங்களின் பெயர்களையே வாரத்துக்கு பெயரிட்டார்கள். இப்படி பெருமை பெற்ற ஜோதிட கலையை முழுவதும் உணராதவர்களால்தான் அவ்வப்போது இந்த கலைக்கு இழுக்கு ஏற்படுகிறது. இது இந்த கலைக்கு ஏற்பட்ட குறை அல்ல. அகத்திய மகரிஷி சுட்டிக்காட்டும் உண்மை உணர்ந்தால் இந்தக் கலையின் உண்மை விளங்கும். ஸ்ரீராமபிரான் பிறப்பதற்கு முன்னாலேயே ஸ்ரீமத் வால்மீகி முனிவரால் ஸ்ரீராமர் ஜாதகம் எழுதப்பட்டது.
ராமாயண காவியத்தில் ஸ்ரீராமர் கடக லக்னத்தில் பிறப்பார் என்பது உள்பட பக்கத்துக்கு பக்கம் என்னென்ன எழுதியிருந்ததோ அவை அனைத்தும் ஸ்ரீராமர் வாழ்வில் நடந்தேறி இருப்பதால் ராமாயண காவியம் தலைசிறந்த ஜோதிட காவியமாக அமைந்தது உண்மை. ஒளிமிகுந்த கண்களால் அற்புதம் நிறைந்த உலகத்தைப் பார்ப்பதைப்போல, திறன் மிகுந்த காதுகளால் அதிசூட்சமமான சங்கீதத்தை கேட்பதுபோல, லக்னம், ராசி, கிரகநிலைகள் அமர்ந்துள்ள இடங்களை ஆராய்ந்து ஒருவன் இப்படிப்பட்ட காரியங்களிலே மேதாவியாக விளங்குவான் என்று அவனுடைய ஜாதகத்தை பார்த்து தெள்ளத்தெளிவாக கூறமுடியும்.

வணக்கம், வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்.